நல்ல முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்தது..!
காரைநகர் பிரதேச செயலகத்தின் ஊழியர் நலன்புரிச்சங்கம் 06.02.2025 புதன்கிழமை நடாத்திய இரத்த தான முகாம் வெற்றியளிக்கவில்லை.
பிரதேச செயலகம், சமுர்தி வங்கி, கிரமசேவையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 300 பேர்கள் வரையானோர் பணி புரிந்து வருகின்றார்கள்.
பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வகையில் பணிபுரியும் காரைநகர் பிரதேச 9 கிரமசேவகர்கள் தமது ஒவ்வொரு பகுதிகளிற்கும் உட்பட்ட தலா இரண்டு நபர்களை இரத்த தான முகாமிற்கு தயார்படுத்தியிருந்தாலும் 18 நபர்கள் இரத்த தானத்தில் பங்கெடுத்திருப்பார்கள்.
அது மட்டுமன்றி காரைநகர் விளையாட்டுக்கழகங்களான 9 விளையாட்டுக்கழகங்களில் அங்கத்தவர்களாக உள்ள 300 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தலா இருவரேனும் பங்கு பற்றியிருந்தால் வெற்றியளித்திருக்கும்.
மருதபுரம் கலைத்தென்றல் விளையாட்டுக்கழக அங்கத்தவர் ஒருவர், ஊரி அம்பாள் விளையாட்டுக்கழக அங்கத்தவர் ஒருவர், மற்றும் VTA தொழில் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் வெளியூர் மாணவர்கள் மூவர், மற்றும் பிரதேச செயல ஊழியர்கள் நால்வர் மற்றும் ஊர் நலன் விரும்பி இருவரென மொத்தம் 12 நபர்கள் மட்டுமே இரத்த தானம் வழங்கியுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருந்து ஒரு வைத்தியர் உட்பட நால்வர் இந்த இரத்த தான முகாமிற்காக வருகை தந்து தமது நேரம், மற்றும் சேவையினை வழங்கிய போதும் 25 க்கும் மேற்பட்டவர்கள் குருதி வழங்கினால் மட்டுமே ஓரளவேனும் வெற்றி பெற்ற பயனுள்ள இரத்த தான முகாமாக கருதப்படும்.
நேர விரயம், பணி விரயம், அனுசரணை விரயம் என பலரது முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.
இதனை முன்னின்று நடாத்திய பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கம் தேவையான ஏற்பாடுகளை செய்திருந்த போதிலும் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஊரியர்கள் உட்பட கிராம சேவகர்கள் 9 பேர்களினாலும் தமது பிரதேசங்களில் இருந்து எவரையும் அழைத்து வர தவறியதுடன் இதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாது அலட்சியப்போக்கில் நடந்து கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் நன்நோக்கோடு வழங்கி வரும் உதவிகள், அனுசரணைகளை பயன்ற்ற வகையில் விரயம் செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றாகவும், தனக்கு தனக்கென உதவிகள் கோரும் ஊரவர்கள் பலரும் பொதுபணி, பொது நோக்கோடு செயற்படுவதில்லை என்பற்கு உதாரணமாகவும் இந்த இரத்த தான முகாம் உதாரணமாக அமைந்துள்ளது.
























